விண்ணை தொடும் பூக்கள் விலைஇல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து


விண்ணை தொடும் பூக்கள் விலைஇல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விண்ணை தொடும் பூக்கள் விலை குறித்து இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

விழாக்காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1,300-க்கு விற்பனையாகிறது.

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் பொங்கல் பண்டிகை வரை விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தயங்கும் மக்கள்

ராமநத்தம் பூ வியாபாரி கலாநிதி: கடந்த ஒரு மாதமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூ, குண்டு மல்லி வரத்து இல்லை. அதனால் வழக்கமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் காக்கட்டான் பூ, சாமந்தி பூ அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது. எப்போதும் அதிகளவில் பூக்கள் வாங்கும் பொதுமக்கள், தற்போது விலை உயர்வால் வாங்கவே தயக்கம் காட்டுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே குறைவாக பூக்கள் வாங்கி செல்கின்றனர். விற்பனையும் மந்தமாக உள்ளதால் என்னை போன்ற சிறு வியாபாரிகள், பூக்கள் கொள்முதல் செய்வதே சிரமமாக உள்ளது.

லாபம் இல்லை

சிதம்பரம் பூ வியாபாரி மலர்: பூக்கள் வரத்து பெருமளவு குறைந்துள்ளதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வருவதாலும் பூக்களை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பூ வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். கோவிலுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் மட்டும் பூக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் என்னை போன்ற பூ வியாபாரிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பூக்கள் விலை அதிகம் என்பதால் எங்களுக்கும் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.

பூக்களை விரும்பாத பெண்கள் இல்லை

விருத்தாசலத்தை சேர்ந்த இல்லத்தரசி கவிதா:- பூக்கள் விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சீசனுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்களை குறைவான விலைக்கு வியாபாரிகள் வாங்கினாலும், பெட்ரோல், டீசல் விலையை காரணமாக வைத்து விலையை அதிகரித்து விடுகின்றனர். பூக்களை விரும்பாத பெண்கள் இல்லை. அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களுக்கும் கொள்ளை பிரியம். ஆனால் அந்த பூவின் விலை மலர் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள், பெண்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பெண்கள் மல்லிகை பூவை தலையில் வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

ராமநத்தம் விவசாயி ராமச்சந்திரன்: பனியின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பூக்கள் சரியாக பூக்கவில்லை. இதனால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பூ பறிக்காமல் வீட்டிலேயே இருக்கிறோம். இனி பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே மீண்டும் மல்லிகை பூ, குண்டு மல்லி பூக்க தொடங்கும். தற்போது கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பூக்கள் மட்டுமே அதிகளவில் விளைந்துள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் பூக்கள் விளைச்சல் இல்லாததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது கனகாம்பரம், சாமந்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

பூ வாங்க முடியவில்லை

கடலூரை சேர்ந்த இல்லத்தரசி கீர்த்திகா: தினசரி பூ வாங்கும் நான், விலை உயர்வால் இரண்டு நாளைக்கு ஒரு முறை பூ வாங்கி சூடி வருகிறேன். மேலும் இந்த விலை ஏற்றத்தால் விரும்பிய பூக்களை வாங்கி சூடமுடியவில்லை. அன்றைய தினம் எந்த பூக்களின் விலை குறைவாக உள்ளதோ, அந்த பூக்களை தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

கோவிலுக்கும் வாங்கிச் செல்ல முடியவில்லை. இதனால் தற்போது விலை குறைவாக உள்ள சாமந்தி பூ மற்றும் ரோஜா பூக்களை வாங்கி பயன்படுத்தும் மனநிலைக்கு மாறியுள்ளேன். இருப்பினும் எனக்கு பிடித்த மல்லிகை பூ, குண்டு மல்லி ஆகிய பூக்களை வாங்க முடியாதது வருத்தமாக தான் உள்ளது.


Next Story