கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை


கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை
x

பழனியில், கழுத்தை அறுத்து கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

தொழிலாளி படுகொலை

பழனி மருத்துவர் நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவர், பழனி-கொடைக்கானல் சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

புற்றுகோவில் என்ற இடத்தில் வந்தபோது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 4 பேர் அவரை சுற்றி வளைத்தனர். இவர்களை கண்டதும் முத்தையா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால் அதற்குள் அந்த கும்பல், முத்தையாவை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே சாய்ந்தார். இருப்பினும் அவரை விடாத கும்பல், ஆட்டை அறுப்பதை போல முத்தையாவின் கழுத்தை அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

4 பேருக்கு வலைவீச்சு

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சொத்து பிரச்சினையில் முத்தையா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story