சிறுவீட்டு பொங்கல் கொண்டாட்டம்
நெல்லையில் குழந்தைகள் சிறுவீட்டு பொங்கல் கொண்டாடினர்.
நெல்லையில் குழந்தைகள் சிறுவீட்டு பொங்கல் கொண்டாடினர்.
சிறுவீட்டு பொங்கல்
பொங்கல் பண்டிகைக்கு பின்னர் சிறுவர் சிறுமியர்கள் சேர்ந்து கொண்டாடும் சிறுவீட்டு பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் அருகில் பொங்கல் வைப்பார்கள்.
அதன்படி நேற்று குழந்தைகள் சிறுவீட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். குழந்தைகள் தங்களது வீட்டு வளாகத்தில் சிறிய வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறிய பாத்திரத்தில் பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாரம்பரிய ஆடைகள்
சிறுவர்கள் சிறுமிகள் ஒன்றுகூடி பொங்கலை படையலிட்டு வழிபட்டனர். விழாவில் சிறுவர்கள் வேட்டியும், பெண் குழந்தைகள் பட்டு பாவாடை, சட்டை, தாவணி போன்ற பாரம்பரிய ஆடைகளையும் அணிந்திருந்தனர்.
மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலமிட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூசணிப்பூவை வைப்பது வழக்கம் ஆகும். பின்னர் அந்த சாணத்தையும் பூவையும் பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள். அதனை பொங்கலுக்கு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பார்கள். நேற்று சிறு வீட்டு பொங்கல் கொண்டாடி முடிந்ததும், சேர்த்து வைக்கப்பட்ட எருவை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தாமிரபரணி ஆற்றுக்கு எடுத்து சென்று கரைத்தனர்.