சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
வடகாடு பகுதியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலையடைந்து வருகின்றனர்.
விலை உயர்வு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 மற்றும் ரூ. 50-க்கும் கடைகளில் விற்பனை ஆகி வந்தது.
மேலும் வெளியூர்களில் இருந்து சரக்கு வேன் மூலமாகவும் 4 கிலோ ரூ.100 எனக்கூறி கூட குறைந்த விலைகளில் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய ஏராளமான வியாபாரிகள் விற்பனை செய்தும் வந்தனர்.
புயல் மழை
தற்சமயம் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடந்து போன மாண்டஸ் புயல் போன்ற காரணங்களாலும் மற்றும் மழையின் காரணமாக, குறிப்பாக முதல் தரமான சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு பெற்று 1 கிலோ ரூ.120 என்ற விலைக்கு கடைகளில் விற்பனை ஆகி வருகின்றன. மேலும் வெளியூர்களில் இருந்து சரக்கு வேன் மூலமாக, 1½ கிலோ ரூ.100 க்கும், சின்ன வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கவலையடைந்து வருகின்றனர்.