தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கலெக்டரிடம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா தலைமையில் பழையகாயல் உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்க பாதுகாப்பு குழுவினர் கொடுத்த மனுவில், பழையகாயல் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உப்பள தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். சங்க விதிகளை மீறி நடந்து உள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் சங்கத்தினர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்காததால் பல்வேறு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சாத்தான்குளம் அருக உள்ள தட்டார்மடம் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நடுவக்குறிச்சியில் பஞ்சாயத்து உப்புநீர் தேக்க தொட்டி தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க வேண்டும். பஞ்சாயத்து பகுதியில் ஒரு வீட்டுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும், என்று கூறி உள்ளனர்.
மணிமண்டபம்
தூத்துக்குடி மாவட்ட சாம்பவராயர் குல பறையர் மகாஜன சங்கத்தினர் கொடுத்த மனுவில், சாத்தான்குளம் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த சாத்தான் சாம்பவருக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழக மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வைப்பாற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும், அதே நேரத்தில் கனரக வாகனங்களில் மணல் எடுப்பதை நிறுத்திவிட்டு, மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.