கடலூர் மாநகராட்சியை தரம் உயர்த்திட திட்டம் தயார் 26 பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
கடலூர் மாநகராட்சியை தரம் உயர்த்திட திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், 26 பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி விகிதம் குறைவு
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதனால் காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, குமராட்சி பகுதி பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் வருகின்ற ஆண்டில் நல்ல தேர்ச்சி விகிதம் கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்மார்ட் கிளாஸ்
ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த காலங்களில் எழுந்தது. ஆனால் தற்போது பயோமெட்ரிக் முறையால் வருகை பதிவு செய்யப்படுவதால், அனைவரும் முறையாக பள்ளிக்கு வருகின்றனர். நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 26 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேலும் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் என்ன காரணத்திற்காக பள்ளிக்கு வரவில்லை என ஆய்வு செய்யும் பணியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை படிக்க வைக்கும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
திட்டம் தயார்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கடலூர் மாநகரில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் 20 நாட்களில் முடிக்கப்படும்.
மேலும் மாநகராட்சியை தரம் உயர்த்திட திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாய்க்கால்களை தூர்வாரி அழகுப்படுத்தி கடலூரை மாற்றி காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி மற்றும் பலர் உடனிருந்தனர்.