208 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்-அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்


208 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்-அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
x

நெல்லை மாவட்டத்தில் 208 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ெதாடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டத்தில் 208 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ெதாடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் வகுப்பறைகள்

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள 208 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நாங்குநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குத்து விளக்கேற்றி புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

உயர்தர கல்வி

வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயில முடியும் என்ற நிலையின்றி கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ-மாணவிகளும் உயர்தர கல்வியை பெற முடியும் என்கிற வகையில், தமிழ்நாட்டிலேயே அதிகமாக நெல்லை மாவட்டத்தில் தான் முதல்முறையாக ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, சபாநாயகர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரின் முயற்சியால் தற்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. கல்வியில் சிறந்த மாவட்டமாக நெல்லை விளங்குகிறது.

ரூ.800 கோடி

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் புதிதாக கட்டுவதற்கும், அதுவும் உயர்நிலை கல்லூரிகளில் இருக்கும் வசதிகளை விட மேலான வசதிகளை கொண்ட சுகாதாரமான, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்திடவும் இதுவரை இல்லாத புதிய வடிவமைப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். எனவே இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளராக உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

300 பள்ளிகளுக்கு...

சபாநாயகர் அப்பாவு பேசும்போது, 'தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பட்டு வந்தாலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி, கம்பெனி சமூக பொறுப்பு நிதியுடன் இணைந்து 300 பள்ளிகளுக்கு இந்த மாதத்துக்குள் இந்த வாய்ப்பை உருவாக்கி தருவோம்' என்றார்.

முன்னதாக, நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மி.ஜோசப் பெல்சி, செல்வகருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவஅய்யப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், பாஸ்கர், மகேஷ், அருண் தவசு, லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி நன்றி கூறினார்.

பணகுடி

பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளி, வீரபாண்டியன் இந்து தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

இதில் பங்குதந்தை இருதயராஜ், சேசு அருளானந்தம், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணை தலைவர் சகாய புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story