"ஸ்மார்ட் காவலர் செயலியும், கண்காணிப்பு கேமராவும் இருந்தாலே குற்றங்கள் குறையும்"; போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேச்சு
ஸ்மார்ட் காவலர் செயலியும், கண்காணிப்பு கேமராவும் இருந்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
ஸ்மார்ட் காவலர் செயலியும், கண்காணிப்பு கேமராவும் இருந்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
அறிமுக கூட்டம்
தமிழகத்தில் போலீசாரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக போலீஸ் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த செயலி குறித்த முதல்கட்ட அறிமுக கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
குறையும்
அப்போது போலீசாரின் செயல் திறனை மேம்படுத்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் போலீசார் ரோந்து செல்லும் போது, எந்தெந்த பகுதிக்கு செல்கிறோமோ அந்த பகுதிகள் அனைத்தும் பதிவாகி விடும். களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ இதுகுறித்த செய்தியை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயலி குறித்த தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு அனைவரும் பயன்படுத்த வேண்டும். இந்த செயலியும், கண்காணிப்பு கேமிராவும் இருந்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது" என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சி.சி.டி.என்.எஸ். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.