குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்
பழனி சண்முகநதி அருகே குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பழனியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் சண்முகநதி பகுதி அமைந்துள்ளது. இங்கு பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சண்முகநதி அருகே அ.கலையம்புத்தூர் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடுமலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் அங்கு மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதற்கிடையே மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து செல்கின்றனர். இதனால் உருவாகும் புகைமூட்டத்தால் அந்த வழியாக சாலையில் செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியோர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.