மோட்டார் சைக்கிளில் 300 மதுபாட்டில்கள் கடத்தல்
கடலூரில் மோட்டார் சைக்கிளில் 300 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஏட்டு பாரதி நேற்று மதியம் செம்மண்டலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டையை வைத்துக்கொண்டு சென்றனர். அவர்கள் பாரதியை பார்த்ததும் வேகமாக சென்றனர். உடன் அவர், அவர்களை வழிமறித்தார். அதையடுத்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளோடு, அந்த சாக்கு மூட்டையை போட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து ஏட்டு பாரதி அந்த மூட்டையை பார்த்த போது, அதில் மதுபாட்டில்கள் சிதறி கிடந்தது.
வலைவீச்சு
அந்த மதுபாட்டில்களை அவர்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தி கடலூரில் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஏட்டு பாரதி, அந்த மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார்.
அதில் 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் யார்?, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.