புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்சில் ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தல் அக்காள்-தங்கை கைது


புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்சில் ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தல் அக்காள்-தங்கை கைது
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 7:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய அக்காள்-தங்கை கைது செய்யப்பட்டனர்.

கடலூர்


புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். இதில் 2 பெண்கள் வைத்திருந்த பையில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமண நிகழ்ச்சிக்கு...

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (45) என்பதும், அக்காள்- தங்கையான அவர்கள் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக மதுபாட்டில்களை கடத்த முயன்றதும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக சென்றால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என நினைத்து கடலூர், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு பஸ்சில் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 108 மதுபாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்காக மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்த முயன்ற அக்காள்-தங்கை கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story