புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மினி ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மின் ஆட்டோக்களில் அரசால் தடை செய்யப்பட்ட 32 மூட்டை புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 மினி ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மினி ஆட்டோவை ஓட்டி வந்த மேல வரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நீதிமொழி(வயது 32) மற்றும் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(47) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.