அரசு பள்ளியில் புகுந்த பாம்பால் பரபரப்பு
புதுக்கடை அருகே அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கடை:
புதுக்கடை அருகே அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளி
புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டையில் ஒரு அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறந்ததையொட்டி காலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரத்தொடங்கினர். இந்தநிலையில் பள்ளி வளாகத்திற்குள் ஒரு நல்ல பாம்பு புகுந்து மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் உலாவியது. இதை பார்த்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்தனர்
இதுகுறித்து மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆசிரியர்கள் விரைந்து வந்து பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பள்ளி வளாகம் முழுவதும் பாம்பை தேடினர். அதற்குள் பாம்பு அந்த பகுதியில் உள்ள செடி கொடிகளுக்குள் புகுந்து மறைந்தது. நீண்ட நேரம் தேடியும் பாம்பு கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.