வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் பாம்பு, குரங்குகளால் பள்ளிக்கு செல்ல அஞ்சும் மாணவிகள் பெயரளவுக்கு தரம் உயர்த்தப்பட்ட விருத்தாசலம் அரசு மாதிரி பள்ளியின் நிலை மாறுமா?
வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் பாம்பு, குரங்குகளால் பள்ளிக்கு செல்லவே மாணவிகள் அச்சப்படுகின்றனர். அதனால் பெயரளவுக்கு தரம் உயர்த்தப்பட்ட விருத்தாசலம் அரசு மாதிரி பள்ளியின் நிலை மாற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகரில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த 1,890 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலும், தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த பள்ளியின் கட்டமைப்பு வசதி என்பது கேட்பாரற்று கிடக்கிறது. அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மாணவிகள் அமர்ந்து கல்வி பயில போதுமான கட்டிட வசதிகள் இல்லை.
வகுப்பறை வசதி
சிமெண்டு ஓடுகளால் ஆன கொட்டகை தான் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கொட்டகையின் வகுப்பறையில் அமர்ந்து தான் கல்வி பயில்கின்றனர். அதனால் போதிய வகுப்பறை வசதி இன்றி மாணவிகள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அதனால் பள்ளி வளாகத்தில் பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். மேலும் பள்ளிக்கூடத்தை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.
அஞ்சும் மாணவிகள்
இதனால் அடிக்கடி பாம்புகள் வகுப்பறைகளுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் இந்த பள்ளிக்கூடம் குரங்குகளின் புகலிடமாகவும் அமைந்துள்ளது. உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறைக்குள் புகுந்த குரங்கு ஒன்று ஒரு மாணவியை கடித்ததில் அவர் காயமடைந்துள்ளார். இப்படி பாம்புகளும், குரங்குகளும் வகுப்பறைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரவே அஞ்சுகின்றனர். ஆகவே பள்ளிக்கூடத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் பள்ளிக்கூடத்தின் அருகில் வசிப்பவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பள்ளி வளாகத்தில் வெளியேற்றுகின்றனர். இதனால் வீசும் கடும் துர்நாற்றத்தால் மாணவிகள் வகுப்பறையில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தரம் உயர்த்தப்படுமா?
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளிக்கூடமானது, தற்போது அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இதுவரை பள்ளியின் தரம் மேம்படவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பள்ளியின் மீது தனி கவனம் செலுத்தி பெயரளவில் மாதிரி பள்ளியாக இல்லாமல், மற்ற பள்ளிகளுக்கு எல்லாம் மாதிரி பள்ளியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பள்ளியின் தரம் மேம்படுவதுடன் மாணவிகளின் சேர்க்கையும் அதிகரிக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.