தஞ்சை மக்களை குளிர்வித்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டபடி சாலையில் சென்ற வாகனங்கள்
தொடர் மழைக்கு பின்னர் தஞ்சை மக்களை நேற்று பனிப்பொழிவு குளிர்வித்தது. காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சாலையில் சென்று வந்தன. இந்த பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
தொடர் மழைக்கு பின்னர் தஞ்சை மக்களை நேற்று பனிப்பொழிவு குளிர்வித்தது. காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சாலையில் சென்று வந்தன. இந்த பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
பனிப்பொழிவு
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவை தஞ்சை மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது.
தஞ்சை பெரியகோவில் ராஜகோபுரம் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதேபோல் தஞ்சை ரெயில் நிலையம், மேம்பாலங்கள், மணிமண்டப கோபுரம், தொல்காப்பியர் சதுக்க கோபுரம் உள்ளிட்டவை தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து காணப்பட்டது.
முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி...
இந்த பனிப்பொழிவானது வெண்புகை போன்று காணப்பட்டது. இதனால் தஞ்சை நகரவாழ் மக்கள், தாங்கள் தஞ்சையில்தான் இருக்கிறோமோ அல்லது ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறோமா என்று நினைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
தஞ்சை நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் கடுமையான பனிபொழிவுக்கு உள்ளானதால் சாலைகளே முழுமையாக தெரியவில்லை. இதனால் காலை 8 மணி வரை வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலையில் சென்றதை பார்க்க முடிந்தது.
விளை நிலங்களிலும்...
திடீரென நிகழ்ந்த இந்த பனிப்ெபாழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் விளை நிலங்கள் உள்ள பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.
விளைநிலங்கள் அனைத்தையும் பனிமூடி காணப்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு அதிகாலையில் செல்ல விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
நடைப்பயிற்சி
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று நிகழ்ந்த இந்த பனிப்பொழிவால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பனிப்பொழிவில் இருந்து தப்பிக்க நடைப்பயிற்சி சென்றவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து சென்றதை காண முடிந்தது. காலை 8 மணிக்குப்பிறகு வெயில் அடிக்கத்தொடங்கிய பின்னரே பனி விலகத்தொடங்கியது. அதன் பிறகு நேற்று பகல் முழுவதும் மாறி மாறி வெயில் அடிப்பதும், மேகம் இருள் சூழ்ந்தும் காணப்பட்டது.