மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 1,08,371 பேர் விண்ணப்பித்துள்ளனர்


மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 1,08,371 பேர் விண்ணப்பித்துள்ளனர்
x

மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 371 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

மகளிர் உரிமைத்தொகை

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், ''இரண்டாம் கட்ட முகாம் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக சென்று நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் வழங்க வேண்டும்.

மேலும் முகாம்களில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்ரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பண்ணைக் குட்டைகள்

அதைத்தொடர்ந்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்கவும், விவசாயத்தை பெருக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்டம் முழுவதும் 1,400 பண்ணைக்குட்டைகள் வெட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.

தற்போது 1,500-க்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகளை வெட்டியுள்ளோம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பண்ணை குட்டை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாயமும் செழிக்கும். மேலும், மாவட்டம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 15 லட்சம் மரக்கன்றுகளை விரைவில் நடவு செய்ய உள்ளோம்.

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் முதல் கட்டமாக 287 கடைகளில் நடந்து வருகிறது.

இந்த முகாம்களின் மூலம் மகளிர் உரிமை தொகை பெற இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 371 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கி, 15-ந் தேதி நிறைவடைகிறது.

2-ம் கட்ட முகாம்

2-ம் கட்ட முகாம் 288 ரேஷன் கடைகளில் நடக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 586 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர். இதில், முதல் கட்ட முகாமில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 238 பேரும், 2-ம் கட்ட முகாமில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 348 பேர் விண்ணப்பிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story