சேலம் மாவட்டத்தில் அரசு பஸ்களில் இதுவரை 8¼ கோடி பெண்கள், கட்டணம் இல்லாமல் பயணம்


சேலம் மாவட்டத்தில் அரசு பஸ்களில் இதுவரை 8¼ கோடி பெண்கள், கட்டணம் இல்லாமல் பயணம்
x

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பயண திட்டத்தின் கீழ் அரசு டவுன் பஸ்களில் இதுவரை 8¼ கோடி பேர் பயணம் செய்து பயன் அடைந்துள்ளனர் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டணமில்லா பயணம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் எருமாபாளையம், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய கிளைகளில் இருந்து 233 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சிறப்பு திட்டமான, மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 25 லட்சத்து 38 ஆயிரம் பெண்கள் அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 66 லட்சத்து 26 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது.

8¼ கோடி பெண்கள்

இத்திட்டம் தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தில் தற்போது வரை மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தின் கீழ் 8¼ கோடி பெண்கள் கட்டணமில்லாமல் டவுன் பஸ்களில் பயணம் ெசய்துள்ளனர். அதிகபட்சமாக டவுன் பஸ்களில் பணிக்கு செல்லும் பெண்களும், உயர்கல்வி படிப்புக்கு செல்லும் பெண்களும் இத்திட்டத்தினால் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர்.

பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story