ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்
x

விராலிமலை அருகே நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

புதுக்கோட்டை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 69). சமூக ஆர்வலரான இவர், அதே பகுதியில் உள்ள சத்திரகுளத்தில் சிலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கின் முடிவில் 2017-ம் ஆண்டு 12 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் செல்வராஜ் மீண்டும் 2018-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை

அதில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மீண்டும் நீதிமன்றம் அறிவித்ததையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருவாய், வட்டார வளர்ச்சி மற்றும் மின்சார துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கால அவகாசம் கேட்டதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஒரு தரப்பினர் கீரனூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வந்தனர்.

உண்ணாவிரதம்

மேலும் பலநாட்கள் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகளிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்க கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் நேற்று காலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு தேசிய கொடியை ஏந்தியவாறு விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

நடவடிக்கை எடுப்பதாக ...

இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி அங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வருவாய்த்துறையினருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக செல்வராஜிடம் கூறி அவரை தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு தாசில்தார் சதீஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற முறைப்படி நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதில் உடன்பாடு ஏற்பட்டு அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.


Next Story