கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருவண்ணாமலையில் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
ஆன்மிக நகரம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலை சுற்றியுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
பவுர்ணமி மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பகல், இரவு நேரங்களில் கிரிவலம் செல்கின்றனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்களுக்கும் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் திருவண்ணாமலை ஆன்மிக நகரமாக மட்டுமின்றி சிறந்த சுற்றுலா நகராமாகவும் விளங்குகின்றனர்.
திருவண்ணாமலையில் பஸ் நிலைய பகுதி, சின்னக்கடை வீதி, தேரடி வீதி, கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
பெண்கள் அச்சம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக ஆன்மிக பயணமாக வரும் பக்தர்களையும், தொழில் ரீதியாக வரும் மக்களையும் அவர்கள் சுற்றி வளைத்து நின்று பிச்சை கேட்டு தொல்லை செய்கின்றனர். பிச்சை எடுக்கும் பெண்களும் 4 அல்லது 5 பேராக இணைந்து கொண்டு தனி நபராக செல்பவரை அவர் காசு கொடுக்கும் வரை துரத்தி செல்கின்றர்.
வழிப்பறியில் ஈடுபடுவது போன்று செயல்படுவதால் பெண்கள் சிலர் அவர்களை கண்டு அச்சம் அடைகின்றனர். தேரடி வீதியிலும், அம்மணி அம்மன் கோபுர வாசல் அருகிலும், பஸ் நிலையம் பகுதியில் பிச்சைக்காரர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். மக்கள் படும் அவதியை அதிகாரிகளும் போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
எனவே இது குறித்து விரைவாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.