சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு - திமுக அழைப்பு


சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு - திமுக அழைப்பு
x

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

சென்னை,

திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக'' கடைபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.

அதற்கிணங்க தந்தை பெரியார் பிறந்த நாளான (17.9.2024) அன்று காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கருணாநிதி சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு'' நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட திமுக செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சமூக நீதிநாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சியினை அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களிலும் நடத்த வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story