மண் பரிசோதனை முகாம்
மண் பரிசோதனை முகாம்
தளி,
தளி அருகே வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் மண் பரிசோதனை முகாம் நடந்தது.
அறிவுரை
எதிர்காலத்தில் அளிக்கப் போகும் விளைச்சலை எதிர்நோக்கி இடப்படுகின்ற ஒவ்வொரு விதையும் பழுது படாமல் வளர்வதற்கு மண்ணின் வளம் முக்கியமாகும். ஆரோக்கியமான நிலமே விதையை துடிப்புடன் முளைக்க வைத்து ஆரோக்கியமாக வளரச் செய்து அளவு கடந்த விளைச்சலை அளிக்கும்.
இயற்கை உரங்களின் பயன்பாடு குறைந்து ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் மண்வளமும் அதில் உள்ள நன்மை தரும் உயிரினங்களும் அழிந்து விட்டதால் எதிர்பார்த்த விளைச்சலை ஈட்டுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்த சூழலில் உயிர்ப்பு தன்மை அற்ற மண்ணின் வளத்தை அதிகரித்து செய்து அதிகப்படியான விளைச்சலை ஈட்டுவதற்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமங்கள் தோறும் முகாமிட்டு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
மண் பரிசோதனை
அந்த வகையில் கோவை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் உடுமலையை அடுத்த சின்னவீரம்பட்டி பகுதியில் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது விவசாயிகளுடன் சென்று மண் மாதிரிகளை சேகரித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலமாக மண்ணை பரிசோதனை செய்தனர்.அதில் உள்ள குறைபாடுகளுக்கு தகுந்தாற்போல் ஊட்டச்சத்து உரங்களை இடுவதற்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் பயிற்சியும் அளித்தனர்.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் எடுத்து உரைக்கப்பட்டது.இதில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, விதை ஆய்வாளர், வேளாண் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தகவல்களை அளித்தனர்.அப்போது விவசாயிகள், வேளாண்மை கல்லூரி மாணவ மாணவர்கள் உடன் இருந்தனர்.