சோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை அருகே அழகர்மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
முருகப் பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக பூ மாலைகளால் தங்க கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வெளிபிரகாரத்தில் சுவாமி புறப்பாடாகி சென்று சஷ்டி மண்டபத்திற்கு போய் இருப்பிடம் சேர்ந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதி கல் மண்டபம் முழுவதும் வண்ண மாலைகளால் தோரணமாக கட்டப்பட்டிருந்தது. மாலையில் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது.
4-ந்தேதி தைப்பூசம்
விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் காலையிலிருந்து மாலை வரை நடைபெறும். இதில் மாலையில் அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். நாளை(சனிக்கிழமை)மாலையில் காமதேனு வாகனத்திலும், 29-ந் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 30-ந் தேதி பூச்சப்பரத்திலும், 31-ந் தேதி யானை வாகனத்திலும், பிப்ரவரி 1-ந் தேதி மாலையில் பல்லாக்கு புறப்பாடு, 2-ந் தேதி குதிரை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க தேரோட்டமும் 4-ந் தேதி தைப்பூச விழா நடைபெறும். இதில் தீர்த்தவாரி உள்பட பல நிகழ்வுகள் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.