மின் இணைப்புகளுக்கு சோலார் பம்புசெட் வழங்க வேண்டும்


மின் இணைப்புகளுக்கு சோலார் பம்புசெட் வழங்க வேண்டும்
x

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு சோலார் பம்புசெட் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருவண்ணாமலை

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு சோலார் பம்புசெட் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து செயல்பட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் எடை போடுவதற்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க வேண்டும். யூரியா பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோலார் பம்பு செட்

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயத்திற்கு வேண்டிய வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விவசாயத்திற்கு என்று சொல்லி செங்கல் சூளைக்கு வண்டல் மண் எடுத்து செல்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு சோலார் பம்புசெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

. உர பிரச்சினையை தடுக்க விவசாயிகள் அனைவருக்கும் மண்வள பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும்.

ஏரிகளை தூர்வாரவும், ஏரி மற்றும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் தனிநபர் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

நடவடிக்கை

அனைத்து மனுக்களை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பாலா, மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) சோமசுந்தரம், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story