நகைக்கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை ரூ.300-க்கு விற்று மது குடித்த ஆசாமி
குலசேகரத்தில் ஒரு நகைக் கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை மற்றொரு கடையில் ரூ.300-க்கு விற்று மது குடித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரம்:
குலசேகரத்தில் ஒரு நகைக் கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை மற்றொரு கடையில் ரூ.300-க்கு விற்று மது குடித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளி மோதிரம்
குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் சென்று தனக்கு பச்சை நிற கல் பதித்த வெள்ளி மோதிரம் வேண்டுமென்று கூறினார். கடைக்காரர் விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளி மோதிரங்களைக் காண்பித்துள்ளார்.
அதில் பச்சை நிற கல் பதித்த 10 கிராம் எடை கொண்ட மோதிரம் ஒன்றை தேர்ந்தெடுத்த அந்த வாலிபர், பின்னர் அதை தனது மனைவியிடம் காண்பித்து விட்டு வருவதாகக் கூறி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். கடைக்காரரும், தெரிந்த நபர் என்ற வகையில் அதற்கு சம்மதித்தார்.
போதையில் கிடந்தார்
இந்தநிலையில் மாலையில் அந்த நபர் திருப்பி வராத நிலையில் கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த நபரைத் தேடிச் சென்றார். அப்போது அந்த நபர் மது போதையில் வீட்டில் படுத்து கிடந்தார். இதையடுத்து கடைக்காரர் மோதிரத்திற்கான பணத்தை கேட்டார். உடனே அவர் பணம் தருவதாகக் கூறி வெளியே வந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கடன் கேட்டார். ஆனால் யாரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை. இதையடுத்து நகைக்கடைக்காரர் அவரிடம் மோதிரத்தை திருப்பிக் கேட்டார். அப்போது மோதிரமும் தன்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து கடைக்காரர் அந்த நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
ரூ.300-க்கு விற்றார்
அந்த நபரிடம் போலீசார் விசாரித்த போது, வெள்ளி மோதிரத்தை வாங்கி, சற்றுத் தொலைவில் உள்ள மற்றொரு கடையில் ரூ.300-க்கு விற்றதாகவும், பின்னர் அந்த பணத்தில் மது குடித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த நபருடன், அவர் விற்ற கடைக்கு சென்று மோதிரத்தை மீட்டு கடைக்காரரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் மோதிரத்தை போதை ஆசாமியிடம் இருந்து வாங்கிய கடைக்காரருக்கு ரூ.300 நஷ்டம் ஏற்பட்டது.
அத்துடன் தனக்கு கிடைக்க வேண்டிய பொருள் கிடைத்ததால் கடைக்காரர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் குலசேகரம் சந்தைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.