புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைப்பு


புகையிலை பொருட்கள் விற்ற   2 கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 குளிர்பான கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், விளாத்திகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் விளாத்திகுளத்தில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பஸ்நிலைய பகுதியில் உள்ள கண்ணன், வசந்தபெருமாள் ஆகியோருக்கு சொந்தமான குளிர்பான கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

2 கடைகளுக்கு சீல்வைப்பு

உடனடியாக அந்த 2 கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து, 2 கடைகளுக்கு சீல் வைக்க நியமன அலுவலர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் நடத்தி வரும் சில்லரை உணவு கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த உணவுகூடத்துக்கு உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பின்னர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கூறுகையில், உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதை மீறி தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்தால், உடனடியாக அந்த கடைகள் மூடப்படும். இந்த விவகாரத்தில் எவ்வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது. எங்காவது தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால், பொதுமக்கள் அதுகுறித்து 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 86808 00900 என்ற புகார் எண்ணுக்கோ தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப ்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும், என்றார்.


Next Story