சோலூர் பேரூராட்சி ஊழியர் பலி


சோலூர் பேரூராட்சி ஊழியர் பலி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில், சோலூர் பேரூராட்சி தற்காலிக ஊழியர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில், சோலூர் பேரூராட்சி தற்காலிக ஊழியர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சுற்றுலா பஸ் மோதியது

நீலகிரி மாவட்டம் சோலூர் பகுதியை சேர்ந்த மாயன் என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி என்கிற ராமு (வயது 32). அதே பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர்கள் 2 பேரும் சோலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி, ஆகாஷ் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் 2 பேரும் அங்கிருந்து சோலூருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். நடுவட்டம் அருகே இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சுற்றுலா பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

போலீசார் விசாரணை

மேலும் ஆகாஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்காக குடிநீர் குழாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை கிருஷ்ணமூர்த்தி, ஆகாஷ் 2 பேரும் கவனிப்பதற்காக சென்றனர். பின்னர் திரும்பி வரும் போது விபத்து நடந்துள்ளது என்றனர்.


Next Story