பசுமை தாயகம் சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம் -சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்


பசுமை தாயகம் சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம் -சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்
x

காலநிலை மாற்ற விழிப்புணர்வு பிரசாரத்தையொட்டி பசுமை தாயகம் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.

சென்னை,

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை தடுக்க அவசரநிலை பிரகடனத்தை உடனே அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க.வின் இணை சங்கங்களில் ஒன்றான பசுமை தாயகம் அமைப்பு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமை தாயகம் சார்பில் காலநிலை அவசர நிலைக்கான நடவடிக்கை கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தின் தொடக்க விழா, சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இதில் பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்று 10 லட்சம் கையெழுத்து படிவத்தில் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து அவரது இளைய மகள் சஞ்சுத்ரா கையெழுத்திட்டார். அதனைத்தொடர்ந்து காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சவுமியா அன்புமணி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலநிலை அவசரநிலை பிரகடனம்

காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தக்கோரி 2019-ம் ஆண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிகப்பெரிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார்.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் நிலைமை மாறவில்லை. உலகம் இன்னும் சூடாகி கொண்டிருக்கிறது. வரலாறு காணாத வறட்சியும், வெப்பமும், பஞ்சமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நிதியும், நீதியும் வேண்டும்

2040-ம் ஆண்டுக்குள் நிலக்கரி அனல்மின் நிலையத்தை மூடுவதாக உலக நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன. இந்தியாவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியபாடில்லை. நிலக்கரி அனல்மின் நிலையங்களுக்காக இன்னமும் நிலங்கள் கையகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளால் உலகின் சுற்றுசூழல் கெடவில்லை. வளர்ந்த 20 நாடுகளால்தான் சுற்றுசூழல் கெட்டது. அவர்களிடம் இருந்துதான் நிதியும், நீதியும் கேட்கிறோம். எனவே நிதியும், நீதியும் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர் மு.ஜெயராமன், இளைஞர் சங்க செயலாளர் வே.வடிவேல், பசுமை தாயகத்தின் இணை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story