விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழை
விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழை
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழையைப் பயன்படுத்தி பயனடைய விவசாயிகளுக்கு அதிகாரிகள் வழிகாட்டியுள்ளனர்.
மானாவாரி
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை அடிப்படையாகக் கொண்டு மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்குப் பருவமழை பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.அத்துடன் நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை அதிகமாக பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இதனால் சாகுபடிக்கான நிலங்களைத் தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.இந்தநிலையில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருந்து பருவமழையைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மண் மாதிரி
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இதன்மூலம் மண் வளம் மேம்படுத்தப்படுவதுடன் மண்ணிலுள்ள தீங்கு செய்யும் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்க உதவும்.மேலும் விளை நிலங்களில் மண் மாதிரி சேகரித்து மண் பரிசோதனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதில் மண்ணிலுள்ள அங்ககச் சத்துக்கள் உள்ளிட்ட சத்துக்கள் குறித்த விபரங்கள் மட்டுமல்லாமல் உரப் பரிந்துரைகளையும் பெற முடியும்.இதனால் மண்ணின் தன்மை மற்றும் சாகுபடி செய்யும் பயிர் ஆகியவற்றின் தன்மை அறிந்து தேவையான அளவில் மட்டுமே உரம் இடலாம்.இதனால் விவசாயிகளின் உரச்செலவு பெருமளவு குறையும்.
விவசாய நிலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.இதன்மூலம் விவசாய நிலத்தின் மேல்மண்ணிலுள்ள சத்துக்கள் மழைநீரில் கரைந்து வீணாக வெளியேறுவதைத் தடுக்க முடியும்.அத்துடன் பாசனத்துக்கான நீரை இருப்பு வைக்கவும் நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்தவும் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் உதவும்.மேலும் பருவமழைக் காலத்தில் பயிர் பாதிப்புகளைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக காய்கறிப் பயிர்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் விதமான நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும்.அதன்படி சாகுபடி நிலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் விதமாக வடிகால் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.