தெற்கு ரெயில்வே பொது மேலாளர் திடீர் ஆய்வு
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் திடீர் ஆய்வு
விருத்தாசலம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரத்தில் இருந்து திருச்சி வரை தனி ரெயிலில் சென்று தண்டவாளங்களின் தன்மை, பாலங்களின் உறுதித் தன்மை ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில் நிலையத்தை முன்மாதிரி ரெயில் நிலையமாக மாற்றுவதற்கான வரைபடத்தை பார்வையிட்ட ஆர்.என்.சிங் டிக்கெட் கவுண்ட்டர், நடைமேடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விருத்தாசலம் ரெயில் நிலையத்தை முன்மாதிரி ரெயில் நிலையமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் உடன் இருந்தார். முன்னதாக எஸ்.ஆர்.எம்.யு. கிளை தலைவர் செல்வம், செயலாளர் கணேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து ரெயில்வே குடியிருப்பில் பழமையான 150 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக வீடுகளை கட்டித்தர வேண்டும். ரெயில்வே திருமண மண்டபத்தில் கூடுதலாக சாப்பிடும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.