எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியதற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'திராவிட மாடல்' ஆட்சியாளர்கள் 'திராவக மாடல்' ஆட்சியாளர்களாக மாறி, அல்லலுறும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக வரிகளை விதித்தல், அ.தி.மு.க. அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களுக்கு மூடுவிழா செய்தல் மற்றும் தங்களின் ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தி.மு.க. அரசு பட்டை நாமம் போட்டுள்ளது. எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாத தி.மு.க. அரசு முதலில் வீட்டு வரியை உயர்த்தியது. தொடர்ந்து மின் கட்டணத்தை வானளவு உயர்த்தி உள்ளது.
இதனால் கொதித்துப்போயுள்ள மக்களின் துயர் துடைக்க, வருகிற 16-ந்தேதி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் தீவிர களப்பணியாற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில், 3-வது முறையாக சோதனை என்ற பெயரில் நாடகத்தை நடத்த, முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.
கண்டனம்
2 பேருடைய வீடுகளிலும் ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்பு துறையினர், 3-வது முறையாக சோதனை நடத்துவது வேடிக்கையாக உள்ளது. எஸ்.பி.வேலுமணியின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், கொரோனா காலத்தில் திறம்பட செயல்புரிந்து பொதுமக்களிடையே பாராட்டை பெற்ற விஜயபாஸ்கரை முடக்கும் விதமாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை மேற்கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுப்ரீம் கோர்ட்டால், 2 நாட்களுக்கு முன்பு குட்டுப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்த தயாரா?, தி.மு.க. அமைச்சருக்கு எதிராக வந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திசை திருப்பவே, எதிர்க்கட்சியினர் மீது மீண்டும், மீண்டும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் கொடுத்து, ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி யோசிக்க வேண்டும்.
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்டரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.