தடுப்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்கும் ஆபத்தான பாலம்
வெள்ளிமலை அருகே தடுப்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்கும் ஆபத்தான பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
மணவாளக்குறிச்சி,
வெள்ளிமலை அருகே தடுப்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்கும் ஆபத்தான பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான பாலம்
இரணியல்-முட்டம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் வளைவான பகுதிகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்படி ஆலமூடு சந்திப்பில் இருந்து வெள்ளிமலை செல்லும் சாலையின் இடதுபுறத்தில் உள்ள குளத்தின் மீது சிறிய பாலம் உள்ளது.
இந்த பாலத்தில் இருந்த தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்குகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் குளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதை தடுக்க அங்கு தடுப்பு கம்பிகள் அருகில் 3 டிரம்கள் அமைத்து கட்டி வைத்து உள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இது தற்காலிக தடுப்பு நடவடிக்கையாக உள்ளது. இந்த பாலம் வழியாக வெள்ளிமலை கோவிலுக்கு ஏராளமானவர்கள் வாகனங்களில் செல்கிறார்கள். எனவே இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் பெரிய விபத்தில் சிக்குவதற்கு முன் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.