மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்ற சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு வரவேற்பு
மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்ற சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் செண்டை மேளம் அடித்து மகிழ்ந்தனர்.
கோவை
மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்ற சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் செண்டை மேளம் அடித்து மகிழ்ந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ.க்கள்
நாட்டின் கலாசாரத்தை தெரிந்து கொள்ளவும், இங்குள்ள கல்வித்தரம் குறித்து அறிந்து கொள்ளவும் மேற்கு ஆஸ்திரேலியா நாட்டின் சட்டமன்ற பெண் சபாநாயகர் மிட்ச்சேலி ராபட்ஸ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டேவிட்ஹனி, டேவிட் மற்றும் இந்திய வம்சாவளியான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மேற்கு ஆஸ்திரேலியா எம்.எல்.ஏ. ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தனர்.
கோவை விமான நிலையத்தில் மேற்கு ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ.க் களுக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் பாரம்பரிய செண்டை மேளம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
செண்டை மேளம் இசைத்தனர்
அப்போது செண்டை மேளத்தின் இசைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க் கள் ஆட்டம் போட்டனர். அதைத்தொடா்ந்து பெண் சபாநாயகர் மிட்ச்சேலி ராபட்ஸ் மற்றும் டேவிட் ஹனி ஆகியோர் செண்டை மேளம் அடித்து மகிழ்ந்தனர். அதில் பெண் சபாநாயகர் மிட்ச்சேலி ராபட்ஸ் செண்டை மேளம் வாசிக்க, டேவிட் ஹனி எம்.எல்.ஏ. ஜால்ரா இசை கருவியை உற்சாகத்துடன் வாசித்தார்.
இதையடுத்து மேற்கு ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ. ஜெகதீஷ் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் கலாசாரம் மற்றும் இங்குள்ள கல்வித்தரம் குறித்து அறிய தமிழகம் வந்துள்ளோம். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை விவசாயம் மற்றும் பழங்குடியின கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். இந்தியாவின் கல்வித்தரம் உயர வேண்டும். கல்வித்தரத்தில் வேறுபாடும், மாறுபாடும் இருக்க கூடாது.
உறவு மேம்படும்
தமிழகத்திற்கும், மேற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேம்படுத்த வேண்டும். நல்ல முறையில் பணியாற்றுபவர் களுக்கு எப்போதும் எங்கேயும் வேலை உண்டு. கலாசாரம் சார்ந்த விஷயங்கள் தமிழகத்தில் மகிழ்வை அளிக்கிறது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மேற்கு ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ.க்கள் கோவை தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். அவர்கள் இன்று (புதன்கிழமை) கோத்தகிரி சென்று தேயிலை விவசாயம் மற்றும் பழங்குடியின கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.