பாரதியார் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மரியாதை


பாரதியார் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மரியாதை
x

எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி

எட்டயபுரம்:

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கலாசார பண்பாட்டு மையம் சார்பில், பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி மற்றும் புத்தக வெளியீட்டு விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டப வளாகத்தில் நடந்தது. பாரதியார் கலாசார பண்பாட்டு மையத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரன், பொருளாளர் திருமலை வேலாயுதம், துணை தலைவர் காந்திமதி சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சபாநாயகர் மு.அப்பாவு கலந்து கொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பேராசிரியர் விருத்தாசலம் சுப்பிரமணியம் தொகுத்து எழுதிய, தமிழர்களின் தொன்மை மற்றும் பன்முக வரலாற்றியல் குறித்த ஆய்வு நூலினை சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலாசிரியர் விருத்தாசலம் சுப்பிரமணியம் ஏற்புரையாற்றினார். முன்னதாக பாரதியின் சிந்தனைகளும் எழுத்துக்களும், பாரதி கனவு கண்ட இந்தியா ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவ-மாணவிகளின் பேச்சு போட்டி, கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராசிரியர் சு.செல்லப்பன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் டேவிட், கனகராஜ், ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story