சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம்


தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரருக்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை முதற்கால பூஜையும், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை 2-ம் கால பூஜையும், அதிகாலை 12.30 முதல் 1.30 வரை 3-ம் காலபூஜையும், அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை 4-ம் கால பூஜையும், 5 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடந்தது.

ஆபத்சகாயேஸ்வரருக்கு விடிய,விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரமும், ஆராதனையும் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மணவழகன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன், பணியாளர்கள் செய்திருந்தனர்.

விடிய, விடிய சிறப்பு அபிஷேகம்

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் 4 கால பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு காசிவிசுவநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவிலில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூவனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மகாசிவராத்திரி விழாவைமுன்னிட்டு அம்மனுக்கு பால்அபிஷேகம், இரவு அம்மன் வீதி உலாவும், .கரகம், அக்கினி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

குடவாசல்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவிலில் சாமிக்கு 4 கால சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.செருகுடி சூட்சமபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 4 கால சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பட்டிமன்றம், நாட்டியாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் செய்திருந்தார்.


Next Story