வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு


வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகைக்காக வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் கூறி உள்ளார்.

நாகப்பட்டினம்

மகளிர் உரிமைத்தொகைக்காக வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்கி கணக்கு

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி. மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (ஐ.பி.பி.) கணக்கு தொடங்க முடியும்.

இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது. மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களிலும், வீட்டுக்கே வந்து வங்கி சேவை வழங்கும் சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்தில் தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

குறைந்த கட்டணத்தில்...

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி ஆகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அணுகுவதற்கு எளிமையான குறைந்த கட்டணத்தில் நகரங்களில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. இதேபோல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து பயனாளிகளுக்கும் ஐ.பி.பி. வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

பயன் அடையலாம்

எனவே, நாகை மாவட்ட பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையை பயன்படுத்தி, அரசின் மகளிர் உரிமைத் தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story