நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்


நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
x

நெல்லையில் இருந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி

நெல்லையில் இருந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள்

நவதிருப்பதி கோவில்களை பக்தர்கள் வசதியாக வழிபடும் நோக்கத்தில் வருகிற புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளான 24-ந் தேதி மற்றும் 1, 8, 15-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு பஸ்கள் புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை (டச்சிங் வனதிருப்பதி), திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று இரவில் புதிய பஸ் நிலையம் வந்து சேருகிறது.

இந்த சிறப்பு பஸ்சில் பயணம் செய்ய நெல்லை புதிய பஸ் நிலையம் மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் பஸ்கள்

மேலும் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் நெல்லை சந்திப்பில் இருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோவில் மற்றும் வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடி, வீரவநல்லூரில் இருந்து அத்தாளநல்லூர் ஆகிய ஊரில் உள்ள கோவில்களுக்கு பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

எனவே பக்தர்களும், பொதுமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story