வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் தினசரி 2 கிராமங்களில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்கலத்தில் முஸ்லீம் சுன்னத்து ஜமாத் பள்ளிவாசல் எதிரே உள்ள மதரசா பள்ளியில் ஜமாத் தலைவர் காஜா நஜீமுதீன், பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்கான் ஆகியோர் முன்னிலையிலும், இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்திலும் நடைபெற்ற முகாமில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர் மேற்பார்வையில் சிறப்பு முகாம் நடை பெற்றது. நேற்று இரு இடங்களில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 1000 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாம்களில் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் பிரதீஸ்வரன் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.