வாராக்கடன்களை வசூலிக்க சிறப்பு முகாம்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாராக்கடன்களை வசூலிக்க சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தி உள்ளதாக வங்கி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாராக்கடன்களை வசூலிக்க சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தி உள்ளதாக வங்கி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாராக்கடன்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாராக்கடன்களை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் கடன் வசூலிப்பு முறையீடு மன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலையில் 2 லட்சத்திற்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிலும் லோக்அதாலத் போன்ற அமைப்புகள் மூலம் வாராக் கடன்கள் குறித்து தீர்வு காணும் போது வங்கிகளுக்கு குறைந்த அளவே திரும்ப பணம் கிடைக்கும் நிலை உள்ளது.
சிறப்பு முகாம்
இந்தநிலையில் மத்திய நிதியமைச்சகம் மத்திய சட்ட அமைச்சகத்துடன் கலந்தாய்வு செய்து வங்கிகள் வாராக்கடன்களை வசூலிக்க சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இதில் கடன் வாங்கியவர்களை நேரடியாக அழைத்து பேசி கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வெளிநடுவர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு அமைப்புகளில் வாராக்கடன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் உள்ள நிலையில் இந்த முகாம்கள் மூலம் வாராக்கடன்களை விரைந்து வசூலிக்க வாய்ப்பு ஏற்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.