மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
நத்தம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.
நத்தம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு தாசில்தார் சுகந்தி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தனிதாசில்தார் லதா, மண்டல துணை தாசில்தார் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் நத்தம் வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரசு தற்போது வழங்கக்கூடிய உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். மேலும் சிறு தொழில்கள் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும், ஆடு, மாடுகள் இலவசமாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் வழங்கினர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.