மாற்றுத்திறனாளிகள் வேலை அட்டை பெற சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகள் வேலை அட்டை பெற சிறப்பு முகாம்
x

ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் வேலை அட்டை பெற சிறப்பு முகாம் 10 நாட்கள் நடக்கிறது.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேகமான நீலநிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2,067 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இருமாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையிலும் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக வருகிற வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே, தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறும் நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story