கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்


கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக கலக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

டாம்கோ

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

டாப்செட்கோ

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொது கால கடன் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கான சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக்கடன், சிறு குறு விவசாயிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்மே கடன் வழங்கப்படும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகமால் இருக்க வேண்டும்.

இந்த இரு திட்டங்களுக்கான லோன் மேளா திருப்பத்தூர் மாவட்டதில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தபப்பட உள்ளது. திருப்பத்தூர் தாலுகாவில் அடுத்த மாதம் 8-ந்தேதியும், நாட்றம்பள்ளி தாலுகாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 9-ந்தேதியும் நடக்கிறது. வாணியம்பாடி தாலுகாவில் வருகிற 24-ந்தேதியும், அடுத்த மாதம் 15-ந்தேதியும், ஆம்பூர் தாலுகாவில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 16-ந்தேதியும் முகாம் நடக்கிறது.இந்த முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story