சேலம் மாநகராட்சி பகுதியில் 28 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
சேலம் மாநகராட்சி பகுதியில் 28 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
சேலம்,
சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இது குறித்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறும் போது, சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சுப்ரமணிய நகர், பழைய சூரமங்கலம், அரிசிபாளையம், பள்ளப்பட்டி, ரெட்டியூர், செவ்வாய்பேட்டை, என்.ஜி.ஜி.ஓ. காலனி, குமாரசாமிபட்டி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அண்ணா மருத்துவமனை, கிச்சிப்பாளையம், குகை, கருங்கல்பட்டி, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் நடக்கிறது. அதே போன்று ஜான்சன் பேட்டை, களரம்பட்டி, அழகாபுரம், இந்திராநகர், அண்ணாநகர், கந்தம்பட்டி காலனி உள்ளிட்ட 12 இடங்களில் நடமாடும் வாகனம் மூலம் என மாநகராட்சி பகுதியில் மொத்தம் 28 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருந்தால் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் முகாமில் உப்பு சர்க்கரை கரைசல், கபசுர குடிநீர் ஆகியவையும் வழங்கப்படுகிறது என்றார்.
ஆய்வின் போது மாநகர நல அலுவலர் யோகானந், பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர் பாலு, கவுன்சிலர் சங்கீதா உள்பட பலர் உடனிருந்தனர்.