வேளாண் கடன் வழங்கும் சிறப்பு முகாம்
திருப்பத்தூரில் வேளாண் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பத்தூர் வேளாண் இணை இயக்குனர் அ.பாலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அடுத்த 13 ஆண்டுகளில் (2020-21 முதல் 2032-33) வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்திற்கு கடன் வழங்குவதற்கான முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்குதிருப்பத்தூர்கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட வருவாய் அலுவலரின் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண் வணிக துணை இயக்குனர், திருப்பத்தூர் கோட்ட வேளாண்மை அலுவலர், வேளாண்மை வணிக பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீதம் வட்டிக்குறைப்பு வழங்கப்படுகிறது.
கடன்தொகை ரூ.2 கோடிக்கு மேற்பட்டதாக இருந்தால் ரூ.2 கோடி வரையிலான தொகைக்கு மட்டும் 3 சதவீதம் வட்டிக்குறைப்பு கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.
விவசாயி, வேளாண் தொழில்முனைவோர் புதிதாகத் தொழில் துவங்க முன் வரும் நிறுவனம் ஆகிய தனியார் துறையினருக்கு, அதிகப்பட்சமாக 25 திட்டங்களுக்கு மட்டும் நிதி உதவி அளிக்கப்படும். இவை மாநில நிறுவனங்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.