பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 29 Jun 2023 1:00 AM IST (Updated: 29 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

சிறப்பு முகாம்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொடர்பாக தேனியில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் மேற்பார்வையில் இந்த முகாம் நடக்கிறது.

விண்ணப்பிக்கலாம்

இந்த சிறப்பு முகாமில், முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்புத் தொகை பத்திரம் பெறப்பட்ட பயனாளிகள், முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வைப்புத் தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), மாற்றுச் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் மூலம் பயனடைந்து வைப்புத் தொகை ரசீது பெறாத பயனாளிகள், வைப்புத் தொகை ரசீது பெற்றுக் கொள்ளலாம். வைப்புத் தொகை ரசீதுகளில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி மற்றும் தாயின் பெயர் ஆகியவற்றில் உள்ள பிழைகளை களைந்திட அதற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டம் மூலம் புதிதாக பயன்பெற ஒரு பெண் அல்லது இரண்டு பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள், பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, தங்கள் பகுதிகளில் செயல்படும் இ-சேவை மையம் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story