மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்
குமரி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் 46 மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்றது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் 46 மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்றது.
சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் 28-ந் தேதி (அதாவது நேற்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 46 மின்வாரிய பிரிவு வினியோக அலுவலகங்களிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. முகாமானது காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து, தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டை, செல்போன் எண் ஆகியவற்றை நேரடியாக கொண்டு வந்து இணைத்து கொண்டார்கள்.
தனி கவுண்டர்கள் அமைப்பு
நாகர்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி, பார்வதிபுரம் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களிலும் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதற்கென மின்வாரிய அலுவலகங்களில் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. முகாமில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.
முகாம் நடந்த மின்வாரிய அலுவலகங்களில் சர்வர் மற்றும் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையும் காணமுடிந்தது. பின்னர் அதுவே தானாக சரியானது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் காணமுடிந்தது.