சேலத்தில் சிறப்பு துப்புரவு பணி; 1,570 டன் குப்பைகள் அகற்றம்


சேலத்தில் சிறப்பு துப்புரவு பணி; 1,570 டன் குப்பைகள் அகற்றம்
x

சேலம் மாநகரில் ஆயுதபூஜை கொண்டாட்டத்தையொட்டி 2 நாட்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்தது. இதற்காக நடந்த சிறப்பு துப்புரவு பணி மூலம் 1,570 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

சேலம்

ஆயுதபூஜை

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்களை சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக சேலம் மாநகர் பகுதியில் ஆயுதபூஜையையொட்டி தொழில் நிறுவனங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்காக வாழை மற்றும் பூ மாலைகள் ஆகியவை தொழில் நிறுவனங்களின் முன்பு தோரணமாக கட்டப்பட்டிருந்தன.

இந்தநிலையில், ஆயுதபூஜை பண்டிகை முடிவடைந்ததால் தொழில் நிறுவனங்களில் இருந்த குப்பைகள் அந்தந்த பகுதியில் இருந்த குப்பை தொட்டிகள் மற்றும் தெருக்களில் கொட்டப்பட்டன. மேலும் விற்பனை செய்யப்படாமல் கிடந்த வாழைகள், பூக்கள், பூசணிக்காய் அனைத்தும் அப்புறப்படுத்தாமல் சாலையோரம் கிடந்தன.

சிறப்பு துப்புரவு பணி

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி வழக்கத்தைவிட சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேங்கும் என்பதால் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த 2 நாட்களாக சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி அனைத்து வார்டுகளிலும் கூடுதல் குப்பை அள்ளும் வாகனங்கள் மூலம் குப்பைகள் உடனுக்குடன் அள்ளப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சிறப்பு துப்புரவு பணிகள் நேற்று இரவு வரையிலும் நீடித்தது.

1,570 டன் குப்பைகள்

இதுகுறித்து சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் யோகானந் கூறியதாவது:-

சேலம் மாநகரில் தினமும் 450 முதல் 500 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி வழக்கத்தைவிட அதிகளவில் குப்பைகள் தேங்கும் என்பதால் சிறப்பு துப்புரவு பணி நடந்தது.

60 வார்டுகளிலும் சிறப்பு பணியில் மாநகராட்சிக்கு சொந்தமான 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன. கடந்த 2 நாட்களில் வழக்கமாக சேகரமாகும் 1,000 டன் குப்பைகளும், ஆயுதபூஜை குப்பைகள் 570 டன் என மொத்தம் 1,570 டன் குப்பைகளும் அகற்றப்பட்டன. அதேநேரத்தில், உணவு பொருட்கள், பழங்கள், காய்கறிகள். வாழை இலைகள், தண்டுகள் போன்றவை உள்ளிட்ட நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story