மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம்


மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம்
x

வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாமை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாமை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம் நடந்தது.

வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் மொத்தம் 536 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாமிற்கு பொதுமக்கள் வந்தனர்.

முகாம் நடைபெறுவதை கலெக்டர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், காலையில் இருந்து சுமார் 100 குடும்ப அட்டைதாரர்கள் வந்துள்ளனர். அவர்களில் இதுவரை 65 குடும்ப அட்டைதாரர்களை பரிசோதித்ததில் 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு அடையாள அட்டை இல்லை என தெரிகிறது.

உடனுக்குடன்

பெரும்பான்மையான மக்கள் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வைத்துள்ளனர். அதையும் கொண்டு வந்து காண்பித்து உறுதி செய்து சென்றனர். மருத்துவ காப்பீடு அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக பதிவு செய்து அவர்களுக்கு அடையாள அட்டை நகல் உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெறுவதற்கு இந்த அடையாள அட்டை பயன்படுகிறது என்றார்.

ஆய்வின் போது துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, தாசில்தார் நடராஜன், மருத்துவ காப்பீட்டு அட்டை வாசுதேவன், வள்ளுவம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் சின்னப்பொண்ணு மற்றும் பலர் உடன் இருந்தனர். 


Next Story