பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம்-போலீஸ் கமிஷனர் என்.காமினி பேட்டி
திருச்சி மாநகரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் என்.காமினி கூறினார்.
திருச்சி மாநகரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் என்.காமினி கூறினார்.
புதிய கமிஷனர் பொறுப்பேற்பு
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சத்தியபிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சமீபத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய என்.காமினி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகரின் 33-வது போலீஸ் கமிஷனராக என்.காமினி நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தனிக்கவனம்
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் என்.காமினி "தினத்தந்தி" நிருபரிடம் கூறியதாவது:-
திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனையைத்தடுப்பதில் கவனம் செலுத்தப்படும்.
திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் குற்றங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் நகரில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாருக்கு பாராட்டு
மேலும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை கொலை செய்த வழக்கில் துரிதமாக புலன்விசாரணை செய்து சம்பவம் நடந்து 7 மாதங்களுக்குள் குற்றம் சட்டப்பட்ட கட்டிட தொழிலாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் என்.காமினி பாராட்டு தெரிவித்தார்.
ஜனாதிபதி பதக்கம் பெற்றவர்
போலீஸ் கமிஷனர் என்.காமினியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆகும். 1997-ம் ஆண்டு, தமிழக காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்த இவர், சேலம், விருத்தாசலம் உட்கோட்டங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். பின்னர், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். 2004-ம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு பெற்ற இவர், ராமநாதபுரம், வேலூர், மதுரை சரகங்களில் டி.ஐ.ஜி.யாக பதவி வகித்துள்ளார். 2022-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் தனது சிறந்த சேவைக்காக 2017-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் பதக்கமும், 2019-ம் ஆண்டில் ஜனாதிபதி பதக்கமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.