மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
அறந்தாங்கியில் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். அறந்தாங்கி வருவாய் கோட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, உதவி உபகரணங்கள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டப்பதிவு, வறுமைக்கோட்டிற்கு கீழ் இலவச வீட்டு மனைபட்டா மற்றும் இலவச வீடு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.