அனைத்து கிராமங்களிலும் சிறப்பு சுகாதார முகாம்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


அனைத்து கிராமங்களிலும் சிறப்பு சுகாதார முகாம்-  கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்களில் நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு சுகாதார முகாம் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் சேர்ந்துள்ள குப்பைகளை ஒட்டு மொத்தமாக தூய்மைப்படுத்த வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறைக்கு சொந்தமான கட்டிட பகுதிகளை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். அதேபோல் அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். திட, திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க அறிவுறுத்த வேண்டும்.

தூய்மைப்படுத்த வேண்டும்

வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை அனைத்து பொது இடங்களிலும் ஒட்டு மொத்த துப்புரவு முகாம் நடத்த வேண்டும். அதே நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்டம்பர் 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடுதோறும் சுகாதாரம், தனி நபர் கழிப்பறை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

செப்டம்பர் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை தேவைப்படும் பொது இடங்களிலும் தனிநபர் வீடுகளிலும் மரக்கன்றுகளை நட வேண்டும். அக்டோபர் 2-ந்தேதி நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என மக்கள் தாங்களே கூறும் அளவிற்கு கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story